ஹைதராபாத்: இந்திய விண்வெளிக் கழகம் (இஸ்ரோ) அடுத்த மாதம் அமெரிக்க செயற்கைக் கோள் ஒன்றை, வணிக ரீதியில் விண்ணில் செலுத்த உள்ளது.
ஹைதராபாத்தில் இத்தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்த அதன் தலைவர் நாராயணன், எதிர்வரும் 2040ஆம் ஆண்டுக்குள், வளர்ந்த நாடுகளின் விண்வெளித் திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
“இந்தியாவுக்கு எனச் சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டவும் பணியாற்றுகிறோம்,” என்றார் அவர்.
தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ‘எல்விஎம்3’ (Launch Vehicle Mark III) மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றும் இது கூட்டுத்திட்டம் அல்ல, வணிக ரீதியில் செயல்படுத்தப்படும் திட்டம் என்றும் திரு நாராயணன் தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்தியாவின் 57 செயற்கைக்கோள்கள் தற்போது விண்வெளியில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றார்.
இந்திய வீரர்களை விண்வெளிக்குப் பத்திரமாக அனுப்பி மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்துவதாகவும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் திரு நாராயணன் விளக்கம் அளித்தார்.
தற்போது ‘சந்திரயான்-4 மற்றும் 5’ ஆகிய திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘சந்திரயான்-4’ திட்டம் 2028ல் செயல்படுத்தப்படும் என்றும் ஜப்பான் விண்வெளி மையத்துடன் இணைந்து ‘சந்திரயான்-5’ செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
“புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, ‘நேவிகேஷன்’ ஆகியவற்றில் செயற்கைக்கோளுக்கான தேவை அதிகமாக உள்ளது. அதனை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம்,” என்றார் திரு நாராயணன்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய ரயில்வேயின் செயல்பாட்டைப் பாராட்டிய அவர், அனைத்து ரயில்களையும் நிகழ்நேரக் கண்காணிப்பில் கொண்டுவருவது விரைவில் சாத்தியமாகும் என்றார்.
“பாதுகாப்பான ரயில் இயக்கங்களுக்குத் தகவல் தொடர்பு மிக முக்கியமானது. தேவையான தகவல் தொடர்பு ஆதரவை வழங்குவதில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“நிலவில் சிறந்த கேமராவை இந்தியா கொண்டுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா உள்ளது.
“புதிய தொழில்நுட்ப முயற்சிகளில் வரும் ஆண்டுகளில் இஸ்ரோவும் இந்திய ரயில்வேயும் மேலும் ஒத்துழைக்கும்,” என்றார் திரு நாராயணன்.

