இத்தாலிய கிராமத்திலிருந்து இந்திய அரசியலுக்கு வந்த சோனியா

நவம்பரில் வெளியீடு காணும் சோனியா காந்தியின் சுயசரிதை

இத்தாலிய கிராமத்திலிருந்து இந்திய அரசியலுக்கு வந்த சோனியா

2 mins read
bf971726-bd47-4f54-94af-1f021de4882c
சோனியா காந்தியின் காதலையும் அரசியலையும் விவரிக்கும் அறுபது ஆண்டு கால தன்வரலாற்று நூலான ‘பிலோங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ நவம்பரில் வெளியீடு காண்கிறது. - படம்: ஃபேக்நெட்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய அரசியலின் முக்கிய ஆளுமையான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, 79, தமது 60 ஆண்டுகால இந்திய வாழ்க்கைப் பயணத்தை தன்வரலாறாக எழுதியுள்ளார்.

‘பிலோங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற தலைப்பிலான அந்நூல், நவம்பர் 10ஆம் தேதி உலகளவில் வெளியீடு காண்கிறது.

அமெரிக்காவின் பிரபல ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ பதிப்பகம் வெளியிடும் 544 பக்க நூலில், இத்தாலியின் எளிய கிராமத்தில் வளர்ந்த ஒரு பெண், நேரு குடும்பத்தின் மருமகளாக மாறியது முதல் பல்வேறு தனிப்பட்ட இழப்புகள்வரை விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

1965ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் ராஜீவ் காந்தியைச் சந்தித்த காதல் தருணங்கள், இந்திய உணவு, கலாசாரத்தை ஏற்றுக்கொண்டது, 1984ல் மாமியார் இந்திரா காந்தியின் படுகொலை, 1991ல் கணவர் ராஜீவ் காந்தியின் கொடூரப் படுகொலை ஆகிய நிகழ்வுகள் தமது வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றின என்பதை அவர் உருக்கமாக விவரித்துள்ளார்.

“இதயத்தை நொறுக்கிய இழப்புகளே என்னை அரசியலுக்குள் தள்ளின,” என்று சோனியா காந்தி கூறியுள்ளார். 2004ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றபோது, தம்மைத் தேடிவந்த பிரதமர் பதவியை நிராகரித்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களையும் முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார்.

அரசியல் சச்சரவுகளுக்கு அப்பால் தமது குடும்பத்தின் மனிதநேயப் பக்கத்தைப் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூலை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலைத் தாம் சார்ந்திருக்கும் அழகான தேசத்திற்குச் சமர்ப்பிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்