புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீண்டும் கூட்டாகச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள இந்தியாவும் சீனாவும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) தெரிவித்தார்.
இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாகவே இந்தியாவும் சீனாவும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத் திரு மிஸ்ரி, செய்தியாளர்களிடம் கூறினார்.
“எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூட்டாகச் சுற்றுக்காவலில் ஈடுபடுவதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது, பின்னர் அப்பகுதியிலிருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்படவும் 2020ல் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் வழிவகை செய்யும். இதன் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவின் கஸான் நகருக்குச் செல்கிறார். அதன் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பின்போது திரு மிஸ்ரி இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அங்குச் செல்வார் என்பதால், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் எல்லை நிலவரம் தொடர்பில் இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது, எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவது என அவை முடிவுசெய்தன.
கடந்த 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டது. அது இருநாட்டு உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.

