மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்க கனிமொழி வலியுறுத்து

2 mins read
21d99904-1358-4f4c-ba3f-7002acd083f4
கனிமொழி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: மணிப்பூர் மக்கள் கடந்த காலங்களில் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகி வந்த நிலையில், இப்போதும் அந்த நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

“குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதல்வர், அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் உச்ச நீதிமன்ற விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.

“சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன,” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த “கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.

மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் பாஜகவின் அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. அடுத்து யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.” என்று கனிமொழி மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்