கர்நாடகப் பெண்ணுக்கு உலகில் யாருக்கும் இல்லாத புது வகை ரத்தம்

2 mins read
8c7e213f-f89f-4f6a-bdc0-298f1fc609b0
கர்நாடகப் பெண்ணுக்கு இருப்பது புது ரத்த வகை என்பதை பிரிட்டன் ஆய்வகமும் உறுதி செய்தது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணுக்கு உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை இருப்பது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான அந்தப் பெண் கோலார் மாவட்டத்தில் வசிக்கிறார். கடந்த ஆண்டு இதய நோய் காரணமாக அவருக்குத் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. குடும்பத்தார் அவரது ரத்த வகை ‘ஓ பாஸிட்டிவ்’ எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், பரிசோதனையில் என்ன வகை ரத்தம் எனத் தெளிவாக முடிவு வரவில்லை. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, ரத்த மாதிரி பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதில், அவருக்குப் புது ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டது.

இதை உறுதிசெய்ய, இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள ஐபிஜிஆர்எல் எனும் அனைத்துலக ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அவரது ரத்த மாதிரி அனுப்பப்பட்டது.

அங்கு, கர்நாடகப் பெண்ணுக்கு இருப்பது புதுவகை ரத்தம் என்பது உறுதியானது. உலகில் வேறு யாருக்கும் இந்த ரத்த வகை இருப்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், அந்தப் பெண்மணியின் குடும்பத்திலும் யாருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை. கடந்த பத்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலும் மூலக்கூறு பரிசோதனையிலும் புது ரத்த வகை என்பதை பிரிட்டன் ஆய்வகம் உறுதிசெய்துள்ளது.

“புது ரத்த வகைக்கு ‘சிஆர்ஐபி’ எனப் பெயரும் சூட்டியது. இதில், ‘சிஆர்’ என்பது குரோமர் என்பதைக் குறிக்கும். ‘ஐபி’ என்பது இந்தியா, பெங்களூரைக் குறிக்கும்,” என்று பெங்களூரு ரத்த மையத்தைச் சேர்ந்த மருத்துவர் அங்கித் மாத்துார் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் மிலான் நகரில் நடந்த அனைத்துலக ரத்த மாற்றுச் சங்கத்தின் 35வது வட்டார மாநாட்டில், புதிய வகை ரத்தம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ஐபிஜிஆர்எல் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்