கரூர்: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கரூர் மாவட்டத்தில் நடத்திய பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமுற்றனர்.
அச்சம்பவம் நிகழ்ந்து மூன்று நாள்களுக்குப் பிறகு கட்சித் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) காணொளி மூலம் பேசியிருந்தார்.
அந்தக் காணொளியில் அவர், கரூர் சம்பவத்துக்குப் பின்னால் சதித் திட்டம் இருக்கக்கூடும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். குறைந்தது ஐந்து மாவட்டங்களில் தாம் நடத்திய பிரசாரக் கூட்டங்களில் பிரச்சினை ஏதும் வராதபோது கரூரில் மட்டும் இப்படி நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று விஜய் கேள்வி எழுப்பினார்.
தமது பிரசாரக் கூட்டத்தை திமுக அரசாங்கம் வேண்டுமென்றே சரியாகச் செயல்பட விடவில்லை என்று அவர் சாடினார்.
மேலும், “பழிவாங்க நினைத்தால் என்னைப் பழிவாங்குங்கள், எனது (கட்சித்) தலைவர்களைத் தொடாதீர்கள். நான் எனது வீடு அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன்,” என்றும் விஜய் தனது காணொளியில் சவால் விடுத்தார். தவெக தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைப் பற்றி அவர் பேசினார்.
சம்பவ இடத்திலிருந்து விஜய் உடனடியாக வெளியேறியது, மூன்று நாள்களாக அமைதி காத்தது ஆகியவற்றின் தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், விஜய்யின் குற்றச்சாட்டுகளை மறுத்த திமுக அரசாங்கம், கரூரில் நடந்தது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்று பதிலளித்தது. விஜய்யின் மற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டோரில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று திமுக சொன்னது.
கரூர் பிரசாரக் கூட்டத்துக்கு முன்னரும் பின்னரும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் தற்காத்துப் பேசியதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் குறிப்பிட்டது. வருவாய்த் துறை செயலாளர், பி. அமுதா, உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார், சுகாதாரத் துறை செயலாளர் பி. செந்தில்குமார், காவல்துறை டிஜிபி ஜி. வெங்கடராமன், ஏடிஜிபி (சட்ட ஒழுங்கு) டேவிட்சன் ஆகியோர் திமுகவின் சார்பில் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு பதிலளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசாங்கம், நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியின் தலைமையில் எட்டுப் பேரைக் கொண்ட குழுவைத் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது. கரூர் சம்பவத்துக்குப் பின்னால் வெளிவராத உண்மை இருப்பதுபோல் தெரிவதாக ஹேமமாலினி முன்னர் கூறியிருந்ததாக இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.
அப்பகுதி மக்களிடம் பேசிய பிறகு ஹேமமாலினி, “இந்த சிறிய இடத்தை (தவெகவுக்கு) கொடுத்தது தவறு. விஜய் பெரிய பேருந்தில் வந்தார். ஏதோ சரியாகப்படவில்லை,” என்று குறிப்பிட்டார்.