தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறக்கக் குறைபாடுகளுக்கும் விபத்துகளுக்கும் தொடர்பு: ஆய்வு

2 mins read
71b5fc8c-88b4-4dcc-9095-6331f26b9ea5
மாதிரிப் படம்: - health.harvard.edu / இணையம்

டோராடூன்: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை விபத்துகள் நிகழ உறக்கம் தொடர்பான குறைபாடுகள்தான் முக்கியக் காரணமாக இருப்பது இந்தியாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (ஏஐஐஎம்எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் லாரி ஓட்டுநர்கள் மட்டுமின்றி தினமும் சிறிய வாகனங்களில் நகரங்களுக்குள் குகுறைந்த நேரப் பயணங்களை மேற்கொள்ளும் ஓட்டுநர்களும் தூக்கக் கலக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏஐஐஎம்எஸ் மனநலப் பள்ளியின் உறக்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான பிரிவு (sleep division) இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின் முடிவுகள் ‘கியூரியஸ்’ (Cureus) எனும் புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக அதிகாரிகள் பல்வேறு இயக்கங்களை நடத்துவதுண்டு. எனினும், உத்தரகாண்டைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது.

2021ஆம் அண்டு அக்டோபர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரையிலான காலத்தில் சாலை விபத்துகளில் காயமடைந்து ஏஐஐஎம்எஸ் கழகத்தில் சேர்க்கப்பட்ட சுமார் 1,200 தனிநபர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது தூங்கியது அல்லது உறக்கம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கியதால் 21 விழுக்காட்டு விபத்துகள் நிகழ்ந்ததாக ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ரவி குப்தாவும் டாக்டர் வி‌ஷால் திமானும் தெரிவித்தனர். மற்றபடி 26 விழுக்காட்டு விபத்துகள் வேளைப்பளுவினால் ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

32 விழுக்காட்டு விபத்துகளுக்கு மதுபோதை தொடர்பிருந்தது. இருந்தாலும், சம்பந்தப்பட்ட விபத்துகளில் சிக்கிய ஓட்டுநர்களுக்கு உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததும் தெரியவந்தது. மதுபோதை, அப்பிரச்சினைகளை மோசமடையச் செய்தது.

உறக்கக் குறைபாடுகளால் ஏற்பட்ட விபத்துகளில் 68 விழுக்காட்டு விபத்துகள் அன்றாடம் பயன்படுத்தப்படும் நேரான சாலைகளில் நிகழ்ந்தவை என்பது அதிர்ச்சி தரும் தகவலாகப் பார்க்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலான விபத்துகள் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிக்கு இடையே நிகழ்ந்தவை. பொதுவாக அந்த வேளையில்தான் களைப்பு ஏற்படும்.

ஓட்டுநர் விவகாரங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்று மருத்துவ வல்லுநர்கள் கேட்டுக்கொள்கின்றனர். ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளில் உறக்கக் குறைபாடுகளுக்கான சோதனை மேற்கொள்வது முக்கிய அங்கம் வகிக்கவேண்டும் என்று பேராசிரியர் ரவி குப்தா சொன்னார்.

தூக்கம் வரும் நேரங்களில் வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வெடுக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஓட்டுநர்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்று இந்திய சாலைப் பாதுகாப்பு மன்ற உறுப்பினரும் ஏஐஐஎம்எஸ் கழகத்தில் மனநல அதிர்ச்சி நிபுணத்துவ மருத்துவராகப் (senior trauma surgeon) பணியாற்றபவருமான டாக்டர் மதூர் உனியால் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்