யுனெஸ்கோ ‘உலகின் நினைவகம்’ பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி

யுனெஸ்கோ ‘உலகின் நினைவகம்’ பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி

படம்: இந்து தமிழ் திசை

07 Nov 2026 - 4:37 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தின் முக்கிய வரலாற்று, இலக்கியப் படைப்புகளான மகாபாரதம், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், கல்ஹணரின் ராஜதரங்கிணி ஆகிய மூன்று நூல்களும், யுனெஸ்கோவின் ‘உலகின் நினைவகம்’ ஆசிய-பசிபிக் வட்டாரப் பதிவேட்டில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக அளவில் கிடைத்துள்ள இந்த மகத்தான அங்கீகாரத்தை மத்திய கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றுள்ளார்.

12ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘ராஜதரங்கிணி’, காஷ்மீர அரச வம்சங்கள், அரசியல் மாற்றங்களை காலவரிசைப்படுத்திய ஆவணமாகப் போற்றப்படுகிறது.

உலகின் மிக நீண்ட இதிகாசமான ‘மகாபாரதம்’, அறநெறி, நீதி, தர்மம், உலகளாவிய தத்துவ வழிகாட்டிகளில் ஒன்றாகத் திகழும் ‘பகவத் கீதை’யை உள்ளடக்கியுள்ளது. கௌடில்யர் என அழைக்கப்படும் சாணக்கியர் இயற்றிய ‘அர்த்தசாஸ்திரம்’, பண்டைய இந்தியாவின் ஆட்சி நிர்வாகம், பொருளியல், வெளியுறவுக் கொள்கை, ராணுவ உத்திகளை விளக்கும் வழிகாட்டியாக உள்ளது.

அரிய பதிவுகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவும் யுனெஸ்கோ 1992ஆம் ஆண்டில் ‘உலகின் நினைவகம்’ திட்டத்தைத் தொடங்கியது. இந்தியாவில் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இந்திராகாந்தி தேசிய கலை மையம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே ரிக் வேதம், சைவ ஆகமக் கையெழுத்துப் பிரதிகள், தமிழ் மருத்துவ நூல்கள், காலசக்கர தந்திர உரைகள், அபிநவகுப்தரின் படைப்புகள், பஞ்சதந்திரக் கையெழுத்துப் பிரதி ஆகியவை யுனெஸ்கோவின் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த மூன்று நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்