மும்பை: அழிந்து வரும் வனவிலங்குகளை, தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ஆடவர் மும்பை விமான நிலையத்தில் கைதானார்.
அவரிடம் இருந்து மெக்சிகோ, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் பல்லிகள், ஆமைகள், மரம் ஏறும் ‘போசம்’கள், டரான்டுலா சிலந்திகள் என ஏறக்குறைய நூறு விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமானத்தில் அவற்றைக் கடத்தி வந்த பயணியின் முகத்தில் பதற்றத்துக்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அதனால் அவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, பல்லிகள் நிறைந்த ஒரு பெட்டியும், சிறு கூடைகளில் மற்ற விலங்குகளும் காணப்பட்டன. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை சுங்கப்பிரிவு வெளியிட்டுள்ளது.
“பிடிபட்டவர் இந்தியக் குடிமகன். சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல அரிய வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் சில வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்களின்கீழ் பாதுகாக்கப்படும் விலங்குகளும் அடங்கும்,” என்று இந்திய அமைச்சு ஜூன் 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வன விலங்குகள், தாவரக் கடத்தல் தடுப்பு, கண்காணிப்பு அமைப்பானது, இத்தகைய கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் இந்தியா, தாய்லாந்து இடையே விமானம் மூலம், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட, ஏறக்குறைய 7,000 விலங்குகள் உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் கூறியது.
கடத்தல் தங்கம், ரொக்கப் பணம், போதைப் பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு வழக்கமான நடவடிக்கைதான்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அண்மைக் காலமாக, வனவிலங்குகளை பறிமுதல் செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பாம்பு, ஆமைகள் ஆகியவை இந்திய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தல் சம்பவங்களில் பெரும்பாலானவை தாய்லாந்தில் இருந்து கடத்தப்படும் விலங்குகள் உள்ளடக்கியதாக இருந்தாலும், அவற்றுள் 80% விலங்குகள் இந்தியாவில்தான் பறிமுதல் செய்யப்படுகின்றன.
வாரந்தோறும் சில கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன.