காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினரின் பேரளவிலான தேடுதல் வேட்டை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினரின் பேரளவிலான தேடுதல் வேட்டை

படம்: சிபிஆர்எஃப்

16 Nov 2026 - 5:21 pm

2 mins read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பள்ளத்தாக்கு முழுவதும் பேரளவிலான தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டு நடவடிக்கையை, மாநில டிஜிபி நளின் பிரபாத், காஷ்மீர் மண்டல ஐஜி சுஜித் குமார் ஆகியோர் நேரில் அங்கு முகாமிட்டுத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

மிர்பசார் பகுதி முழுவதுமாகப் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 11) நிகழ்ந்த அத்தாக்குதலில், பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களைப் பறித்துச் செல்லும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

எனினும், உளவுத்துறை முன்கூட்டியே அளித்த எச்சரிக்கையும் சிஆர்பிஎஃப் வீரர்களின் வேகப் பதிலடியும் பயங்கரவாதிகளின் திட்டத்தைத் தகர்த்து அவர்களைத் தப்பியோடச் செய்தன. இந்தத் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தீவிர விசாரணைக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், தப்பியோடிய பயங்கரவாதிகளின் துல்லியமான மின்னிலக்கத் தடயங்கள், முக்கியச் சான்றுகள் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்துள்ளன.

காஷ்மீரில் தற்போது எஞ்சியிருக்கும் ஒரேயொரு உள்ளூர் பயங்கரவாதியான லத்தீப் அகமது பட் என்பவரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடும் எனப் புலனாய்வுத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நீண்ட அமைதி நிலவிவந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில், மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த காலங்களைவிட தற்போது உள்ளூர் இளையர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவது முற்றிலுமாக நின்றிருந்தாலும், தப்பியோடியுள்ள வெளிநாட்டுப் பயங்கரவாதிகள், மீதமுள்ளவர்களைக் குறிவைத்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்