புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், அம்மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அதை ஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் மனநிறைவு அடைவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை தொடர்பாக நீண்டகாலப் பிரச்சினை இருந்து வருகிறது. மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்பது தமிழகத்தின் கோரிக்கை. கர்நாடக அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு இந்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு மட்டுமன்றி, தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இதனிடையே, மேகதாது அணை விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத் துணை முதல்வர் டி கே சிவகுமார், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் தமிழக அரசு இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது குறித்துக் கவலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
டி கே சிவகுமாரின் இந்தக் கருத்துக்குத் தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காவிரி விவகாரம் குறித்துக் கர்நாடகத் துணை முதல்வர் சிவகுமார் பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பை எந்த வகையிலும் கர்நாடகா மீறக் கூடாது என அம்மாநில அரசுக்குப் பிரதமர் அறிவுறுத்த வேண்டும்,” என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

