தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் வழங்கப்பட்ட குளிர்பானத்தில் உலோகத் துண்டுகள்: பயணி புகார்

2 mins read
01b4b048-3451-4db0-ab82-f15441ee1a34
அபிஜித் குடித்த பானத்தை ஆய்வு செய்தபோது, அதில் உலோகத் துண்டுகள் காணப்பட்டதாக அவரது நண்பர்களில் ஒருவரான குப்தா கூறினார்.  - படம்: ஊடகம்

மும்பை: அண்மையில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொண்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் உலோகத் துண்டுகள் இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

அபிஜித் போஸ்லே என்ற அந்தத் தொழிலதிபர், தனது நண்பர்களுடன் கோவாவில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஊர் திரும்பியபோது, இச்சம்பவம் நிகழ்ந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

“விமானம் புறப்பட்டதும், விமான ஊழியர்கள் வழக்கம்போல் சிற்றுண்டிகள் வழங்கினர். நான் குளிர்பானம் வாங்கிக் கொண்டேன்.

“அதைப் பருகியதும் திடீரென வயிற்றில் வலியும் எரிச்சலும் ஏற்பட்டது. தாங்கமுடியாத வலியால் நான் துடித்தபோது, அருகில் இருந்த என் நண்பர்கள் இருவர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டனர்,” என்றார் அபிஜித் போஸ்லே.

அவர் அருந்திய பானத்தை ஆய்வு செய்தபோது, அதில் உலோகத் துண்டுகள் காணப்பட்டதாக நண்பர்களில் ஒருவரான குப்தா கூறினார்.

எனினும், இது குறித்து புகார் அளிக்க அந்தக் குளிர்பானம் உள்ள ‘கேனை’ (Can) ஆதாரமாக எடுத்துச் செல்ல முயன்றபோது, விமானக் குழுவினர் தடுத்து நிறுத்தி, அதைத் தங்களிடம் இருந்து திரும்ப எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“விமானம் தரையிறங்கியதும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தார் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபிஜித், இச்சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்திடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்திருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானங்களில், ‘சீல்’ வைக்கப்பட்ட குளிர்பானங்கள்தான் பயணிகளுக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அபிஜித்துக்கு வழங்கப்பட்ட குளிர்பான கேன், அதன் விற்பனையாளரால் விசாரணைக்காகத் திரும்ப மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்