தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானாவில் உலக அழகிப் போட்டி

2 mins read
38fe2ba2-e184-42cb-bf97-142e9b24b294
சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த ‘மிஸ் வோர்ல்ட்’ நிகழ்ச்சியில் 2023 உலக அழகிப் பட்டத்தை வென்ற டென்மார்க்கின் கிரிஸ்டீனா பிஸ்கோவா. - படம்: thedailyguardian.com / இணையம்

ஹைதராபாத்: இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வோர்ல்ட்’ உலக அழகிப் போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக அழகிப் போட்டியை தெலுங்கானா மாநில அரசாங்கம் நடத்துகிறது. அதையொட்டி போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை (மார்ச் 20) நடைபெற்றது. தெலுங்கானா சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் அதில் கலந்துகொண்டார்.

“72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் ஐதராபாத் உட்பட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும். இதற்கான செலவை தெலுங்கானா சுற்றுலாத்துறையும் ‘மிஸ் வோர்ல்ட்’ நிறுவனமும் சமமாக ஏற்றுக்கொள்ளும்.

“உலக அழகிப் போட்டி நடத்துவது மாநிலத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றன. உண்மையில் இந்தப் போட்டியின் மூலம் மாநிலத்தின் பொருளியல் நிலை உயரும்.

“உலக அழகிப் போட்டியை தெலுங்கானாவில் நடத்துவது வெறும் கெளரவப் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் பெண்களைக் கொண்டாட இது ஒரு வாய்ப்பு. அவர்களின் மனவுறுதியை அங்கீகரிக்க இது ஒரு தெளிவான அழைப்பு,” என்று திரு ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறினார்.

தற்போதைய உலக அழகியான கிறிஸ்டினா பிஸ்கோவா, “கடந்த ஆண்டு இந்தியாவில் மும்பை, டெல்லி நகரங்களில் எனது உலக அழகிப் பயணத்தைத் தொடங்கினேன்.

“அந்தப் பயணத்தை இந்தியாவிலேயே நிறைவு செய்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் வலிமை. உங்களிடம் பல மொழிகள், பல இனங்கள் உள்ளன. அது அழகாக இருக்கிறது,” என்று இந்தியாவைப் பாராட்டிப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்