தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா அமைதித் திட்டத்திற்காக டிரம்ப்பைப் பாராட்டிய மோடி

2 mins read
5e44e869-c19f-427b-b598-23ad05daf767
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடது), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காஸா அமைதித் திட்டத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப் பாராட்டியிருக்கிறார்.

இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுகள் குறித்தும் திரு டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் சொன்னார். வரும் வாரங்களில் கூடுதல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று திரு மோடி கோடிகாட்டினார். ‘எக்ஸ்’ தளத்தில் அந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

“என்னுடைய தோழர் அதிபர் டிரம்ப்புடன் பேசினேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காஸா அமைதித் திட்டம் கைகூடி வந்ததற்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுகளில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தைப் பற்றியும் இருவரும் கலந்துரையாடினோம். வரும் வாரங்களில் மேலும் அணுக்கமாகப் பணியாற்றவும் இணங்கியிருக்கிறோம்,” என்றார் திரு மோடி.

‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட இன்னொரு பதிவில் இந்தியப் பிரதமர், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவையும் பாராட்டியிருந்தார்.

“என் நண்பர் பிரதமர் நெட்டன்யாகுவை அழைத்துப் பேசினேன். அதிபர் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தின்கீழ் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்துக் கூறினேன். பிணையாளிகள் விடுவிக்கப்படுவதிலும் காஸா மக்களுக்கு மனிதநேய உதவி கூடுதலாக வழங்கப்படுவதிலும் இணக்கம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் பயங்கரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் மறுஉறுதிசெய்துகொண்டோம்,” என்று திரு மோடி சொன்னார்.

அண்மையில் இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூ‌‌ஷ் கோயல் இந்தியாவும் அமெரிக்காவும் இரு தரப்பு வர்த்தக உடன்பாடு குறித்துப் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேசிவருவதாகக் கூறியிருந்தார்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (நவம்பர் 2025) உடன்பாட்டை எட்டுவதற்குச் சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார். விவசாயிகள், பால் பொருள்கள் சார்ந்த துறையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்று திரு கோயல் கூறினார்.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடாக இருக்கிறது அமெரிக்கா. 2024-25 நிதியாண்டில் இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு US$131.84 பில்லியன்.

குறிப்புச் சொற்கள்