முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாட கேரளா திட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாட கேரளா திட்டம்

2 mins read
3a9dabe4-af23-4782-a317-b892f7907887
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி வழங்காது என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசஃப் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: தி நியூஸ் மினிட்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு வரவு-செலவு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதற்கு கேரள அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக-கேரள அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறது. ஆனால், கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய அணை கட்ட வேண்டும் என்பதும் கேரளா வலியுறுத்தும் கோரிக்கையாகும். ஆனால், அணையின் நிர்வாக உரிமைகளைப் பேணிவரும் தமிழக அரசோ அணையின் கட்டுமானம் உறுதியாக இருப்பதால் புதிய அணையைக் கட்ட வேண்டியத் தேவையில்லை எனத் தொடர்ந்து கூறிவருகிறது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசின் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசஃப், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி வழங்காது என்றார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த அணை பாதுகாப்பு ஆய்வுகள், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளைத் தமிழகம் இன்னும் முழுமையாகச் செய்யவில்லை என்று அமைச்சர் ஜோசஃப் சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படைப் பாதுகாப்பு தணிக்கைகூட மேற்கொள்ளப்படவில்லை என அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

எனவேதான் தேசிய அணை பாதுகாப்பு ஆணையமே முழுமையான ஆய்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேரளா கோரியுள்ளதாக திரு மோன்ஸ் ஜோசஃப் விளக்கமளித்தார்.

142 அடி என்ற நீர்மட்ட வரம்பை இரு மாநிலங்களும் தன்னிச்சையாக மாற்ற முடியாது என்றும் கேரளத்தின் உரிமைகளையும் மக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய தமிழகம் நீர்மட்டத்தை உயர்த்த முற்பட்டால் உடனடியாக கேரளா உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்றும் அமைச்சர் மோன்ஸ் ஜோசஃப் எச்சரித்தார்.

முன்னதாக, கேரள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய பட்ஜெட் அறிவிப்பு, பல ஆண்டுகளாகத் தொடரும் இரு மாநில எல்லை நீர்ப் பங்கீட்டுச் சிக்கலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்