புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருக்கும் யமுனை நதியில் முதலாவது பொழுதுபோக்கு மின்சாரப் படகுச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
‘நமோ யமுனா ரிவர் சபாரி’ என்ற அந்த 30 இருக்கைகள் கொண்ட படகுச் சேவையை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், புதுடெல்லி முதல்வர் ரேகா குப்தா, புதுடெல்லி சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
சோனியா விகார், ஜகத்பூர் இடையே ஆறு கிலோமீட்டர் தூரத்திற்குச் சென்றுவரும் 40 நிமிடப் பயணத்திற்குக் கட்டணமாக $6.87 (500 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய கீழ்த் தளமும் திறந்தவெளி மேல் தளமும் கொண்ட அந்தப் படகுச் சேவையுடன், படித்துறை அருகே விளையாட்டு, கேளிக்கைப் பூங்கா போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் சுற்றுலாவை விரிவுபடுத்தவும் தூய்மையான உள்நாட்டுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் அச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கை நதியில் புதிய ‘வாட்டர் மெட்ரோ’ படகுப் போக்குவரத்தை அம்மாநில முதல்வர் சாம்ராட் சவுத்ரி இதனைத் தொடங்கிவைக்கிறார்.
திகா மினார் படித்துறைக்கும் காந்தி படித்துறைக்கும் இடையே இயக்கப்படும் அந்தப் படகு 50 இருக்கைகளைக் கொண்டது.
கழிப்பறை, சக்கர நாற்காலி வசதிகள் கொண்ட அந்த அதிநவீனப் படகு, கங்கையில் காற்று, ஒலி மாசுபாடில்லாத சூழலியல் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
