புதுடெல்லி: புற்றுநோய் சிகிச்சையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அங்கு இயங்கி வரும் ‘ரோச் ஃபார்மா இந்தியா’ என்ற நிறுவனம், புதிய ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய டெசென்ட்ரிக் (Tecentriq) என்ற இந்த நோய் எதிர்ப்பு சிகிச்சை முறைக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நரம்பு வழிதான் (ஐவி முறை) மருந்து செலுத்தப்படும். இதற்குப் பல மணிநேரம் ஆகும். ஆனால், தோலுக்கு அடியில் தொடைப் பகுதியில் இந்தப் புதிய ஊசி மருந்தைச் செலுத்த ஏழு நிமிடங்கள் போதும்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு வகையிலும் புதிய ஊசி உதவும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிகிச்சையை எளிதாக்கும் எனக் கூறப்படுகிறது.
நோயாளிகள் மருத்துவமனையில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதுடன், உடல், மன ரீதியான சோர்வைத் தடுக்கும். புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க மருத்துவமனைகளுக்கும் உதவும் என்பதே புதிய ஊசி குறித்து நிபுணர்கள் சுட்டிக்காட்டும் முதன்மை அம்சங்களாகும்.
இந்த ஊசியில் அடெசோலிசுமாப் (atezolizumab) என்ற நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. இது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து எளிதாக அழிக்க உதவும்.
எனினும், ஊசி சிகிச்சை பெறுபவர்களுக்கு, அதற்கு முன்னதாக சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடற்தகுதி உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
ஒரு ஊசியின் விலை ஏறக்குறைய ரூ.3.7 லட்சம் என்பது கவனத்துக்குரிய விஷயம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஆறு ஊசிகள் வரை தேவைப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் மொத்தச் செலவு பல லட்சங்களைத் தொடுவதால், ஏற்கெனவே சுகாதாரச் செலவுகளால் தவிக்கும் பல இந்தியக் குடும்பங்களுக்கு, இந்த ஊசியை வாங்குவது பெரும் சமையாக மாறக்கூடும்.
“கீமோதெரபி சிகிச்சை முறையில், நோயாளியின் உடலில் உள்ள நல்ல செல்களும் அழியக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இந்தப் புதிய ஊசி, புற்றுநோய் செல்களை மிகவும் திறம்பட அடையாளம் கண்டு அழிப்பதற்காக, உடலின் சொந்தப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது,” என்று இதன் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

