புதுடெல்லி: சட்டவிரோதச் செயல்கள், இணையவழி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், கைப்பேசிகளில் ‘சிம் அட்டை’ இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற குறுஞ்செய்திச் செயலிகள் இயங்கும் வகையில் புதிய விதிகளை இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கட்டாயமாக்கியுள்ளது.
வரும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரவுள்ள புதிய விதிமுறையின்படி, செயலிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள சிம் அட்டை கைப்பேசியில் தொடர்ந்து இயங்க வேண்டும். சிம் அட்டை அகற்றப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ அல்லது முடக்கப்பட்டாலோ, அந்தச் செயலியின் சேவைகள் உடனடியாக நின்றுவிடும்.
மேலும், கணினி வழியிலான சேவைகளும் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே கணக்கிலிருந்து வெளியேறி விடும் (Log out) வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டை இல்லாமல் இணைய வசதி மூலமாக மட்டும் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் செயலிகளைப் பயன்படுத்துவோர் இனி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர், ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்துவோர், முதன்மையாக வைஃபை இணைப்பையே நம்பியிருப்போர் தங்களின் பயன்பாட்டு முறையை இந்தப் புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
இதற்காக 2026, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களின் தொழில்நுட்ப அமைப்பை மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட் உள்ளிட்ட முன்னணிச் செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய விதிகளுக்கு ஏற்ப, இயங்குதளத்தில் மாற்றங்களைச் செய்ய ‘ஆப்பிள்’ நிறுவனம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரே எண்களைப் பல சாதனங்களில் பயன்படுத்துவோர், அடிக்கடி சிம் அட்டைகளை மாற்றுவோருக்கு இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, சிம் அட்டை இல்லாமலேயே இணைய வசதி மூலம் வெளிநாடுகளில் இருந்து நடத்தப்படும் இணையக் குற்றங்கள், போலி கைது மிரட்டல்கள், நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறை பயனாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தினாலும், நாட்டின் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்ய இது மிக அத்தியாவசியமான நடவடிக்கை எனத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலியான தொலைபேசி எண்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பண மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சந்தேகத்திற்குரிய கணக்குகளை உடனடியாகக் கண்டறிந்து முடக்கவும் இந்த ‘சிம் இணைப்பு’ முறை பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
