புதிய விசா விதிமுறை: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா

புதிய விசா விதிமுறை: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா

2 mins read
2265ceab-d53d-4512-bd0d-7e1cb8549e3e
மாணவர்களுக்கு கூடுதல் நிர்வாகச் சுமைகளையும் விசா நீட்டிப்புக்கான அலைச்சலையும் ஏற்படுத்தும் என இந்தியத் தரப்பில் கருதப்படுகிறது. - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: அனைத்துலக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கலாசாரப் பரிமாற்றப் பயணிகளுக்கான விசா விதிமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடுமையாக்கி உள்ளது குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, இந்தியப் பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான சிரமங்கள் குறித்து புதுடெல்லி தனது கவலைகளை அமெரிக்க தரப்பிடம் அதிகாரபூர்வ முறையில் எழுப்பியதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோருக்கு அந்நாட்டு அரசு விசா வழங்குவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அரசு மாணவர்கள், ஊடகத் துறையினருக்கான விசா வழங்குவதில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

இதையடுத்து மாணவர்களுக்கான ‘எஃப்’ (F) வகை விசாக்கள், கலாசாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான ‘ஜே’ (J) விசாக்கள், ஊடகத் துறையினருக்கான ‘ஐ’ (I) விசாக்கள் செல்லுபடியாகும் கால அளவு நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் என்பதே அமெரிக்கா விதித்துள்ள புதிய விதிமுறையாகும்.

அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சிப் பதிவேட்டில் இந்தப் புதிய விதிமுறை வெளியிடப்படும். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 60 நாள்களுக்குப் பிறகு புதிய விதிமுறை அதிகாரபூர்வமாக செயல்பாட்டுக்கு வரும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெறவும் பல்வேறு காரணங்களுக்காகவும் அமெரிக்கா செல்கின்றனர். அவர்கள் அமெரிக்க அரசின் நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளது என்பதே இந்தியத் தரப்பின் கவலை.

மாணவர்களுக்கு கூடுதல் நிர்வாகச் சுமைகளையும் விசா நீட்டிப்புக்கான அலைச்சலையும் ஏற்படுத்தும் என இந்தியத் தரப்பில் கருதப்படுகிறது. ‘பிஹெச்டி’ போன்ற ஆராய்ச்சிப் படிப்புகள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதை இந்திய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இந்தியக் கல்விசார், தொழில்முறை திறனாளர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்களிப்பை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட ஏறக்குறைய இரண்டு மாத அவகாசம் இருப்பதால் அதற்குள் இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண புதுடெல்லி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவிசாமாணவர்கள்விதிமுறைஊடகம்பயணிகள்உயர் கல்விகலாசாரம்