துக்காராம் முண்டேவுக்கு நியூயார்க் டைம்ஸ் புகழாரம்

துக்காராம் முண்டேவுக்கு நியூயார்க் டைம்ஸ் புகழாரம்

கோப்புப் படம்:

06 Oct 2026 - 8:59 pm

1 mins read

மும்பை: மகாராஷ்டிரா மாநில உணவுக் கட்டுப்பாடு, மருந்து நிர்வாக ஆணையராகச் செயல்பட்டு வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கைகளைப் பாராட்டி, புகழ்பெற்ற ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பதவியேற்ற முதல் நாளிலிருந்தே உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்கு எதிராகத் துக்காராம் முண்டே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விதிகளை மீறும் உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு உடனடியாகச் ‘சீல்’ வைப்பது, காலாவதியான, ரசாயனம் கலந்த உணவுப்பொருள்களைப் பறிமுதல் செய்து அழிப்பது என அவரது அதிரடி நடவடிக்கைகள் தொடர்கின்றன.

வியாபாரிகள் செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்தியாவில் ‘ராக் ஸ்டார்’ போன்ற ஓர் உணவு ஆய்வாளர் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரையில், “உணவருந்துபவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்; உணவக உரிமையாளர்கள் அவருக்கு அஞ்சுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவரது கள ஆய்வுகள் உணவுச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பொதுவெளியில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக அந்த நாளிதழ் பாராட்டியுள்ளது.

இந்த அனைத்துலக அங்கீகாரம் குறித்துச் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள துக்காராம் முண்டே, “நல்லாட்சி என்பது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது மட்டுமல்ல, அது மக்களிடையே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். உணவுப் பாதுகாப்புத் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதே எங்களின் நோக்கம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உணவுபாதுகாப்புத் துறைநியூயார்க்நாளிதழ்பாராட்டுமகாராஷ்டிராஐஏஎஸ்அதிகாரி