புதுடெல்லி: டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பு, வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பத்துப் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாலம் என்ற பகுதியில் உள்ள அந்த நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கட்டடத்துக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
கீழ்த்தளம், முதல் தளத்தில் இருந்த துணிக்கடை, அழகுசாதனப் பொருள்கள் விற்கும் கடையில் ஏற்பட்ட மின் கசிவே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளியேறும் வழி நெருப்பால் சூழப்பட்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்; சிலர் உயிரைக் காக்கக் கட்டடத்திலிருந்து குதித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தடவியல் குழு விசாரணை
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக அவர் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்துத் தடயவியல் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா, தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

