பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து தமக்கு எவ்விதக் கவலையும் இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய டி.கே. சிவகுமார், மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு அத்திட்டத்தைச் செயல்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் ஒப்புதலின்றி கர்நாடகா அத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவுக்கு எதிரானது என்றும் சாடினார்.
மேலும், இத்திட்டம் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
பெங்களூர் நிகழ்ச்சியில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார் திரு டி.கே. சிவகுமார்.
“இது என் மாநிலம், இது என் உரிமை. யார் விமர்சித்தாலும் எனக்குக் கவலையில்லை. காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக என யார் எதிர்த்தாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை,” என்றார்.
அதேவேளையில், அத்திட்டம் குறித்து தமிழகத் தலைவர்களுக்கு நேரடியாக விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் ஒரு தூதுக்குழுவாகக் கர்நாடகாவுக்கு வருகை தந்து, அணை கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டால் அதன் நன்மைகளை எடுத்துரைக்க முடியும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
