தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்: மூழ்கும் டெல்லி

2 mins read
0a141c6b-7d98-4749-a558-259a04dffa40
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக, வட இந்திய மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் ஐந்து நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஒரு சிற்றூரையே வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்துவிட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ஆகஸ்ட் 8 முதல் 12ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

இச்சமயம் உத்தராகண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களும் கனமழையில் இருந்து தப்ப இயலாது என வானிலை மையம் கூறியது.

பீகாரில் உள்ள பல ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டிவிட்டது.

உத்தராகண்டில் உள்ள கீர் கங்கா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 141 யாத்ரீகர்களும் சுற்றுலாப் பயணிகளும் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, தென் மாநிலங்களையும் கனமழை ஆட்டிப்படைத்துள்ளது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்வதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

குறிப்பாக, தென்காசி, தேனி மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் அவ்வப்போது சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இடுக்கி, திரிச்சூர், மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், ஆரஞ்சு எச்சரிக்கையை அடுத்து கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை:

தலைநகர் டெல்லியைப் புரட்டிப் போட்டுவரும் பெருமழை காரணமாக, விமானச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 8ஆம் தேதி பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை நேரங்கள் பாதிக்கப்பட்டது.

மேலும், முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் வாகனமோட்டிகள் சிரமப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்து நிலைகுத்தியது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி டெல்லிக்கு வர வேண்டிய 118 விமானங்கள் தாமதமாகின. அவற்றுள் 13 விமானங்கள் டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்