தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

2 mins read
8bf172ba-920d-4ed7-a9c4-1991cd7a1461
தமிழகத்தைப் பொறுத்தவரை, 23 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருப்பது தெரிய வந்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் தரவுகள்மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் முதன்முறையாக ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கல்வி அமைச்சின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு அவ்வப்போது பல்வேறு புள்ளிவிவரங்களையும் தரவுகளையும் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கையானது, தரமான கல்வியை உறுதி செய்ய உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

மாணவா்-ஆசிரியா் விகிதம் முன்னேறவும் ஆசிரியா்களைப் பணியமா்த்துவதில் வட்டார அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கையாளவும் ஆசிரியா்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கிய நடவடிக்கை என்றும் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2022-23-இல் இருந்து சீராக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கடந்த 2024-25ஆம் கல்வியாண்டில் நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறியது.

“பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருக்க வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடிப்படைக் கல்வியில் 10 மாணவா்களுக்கு ஓராசிரியா், தொடக்கக் கல்வியில் 13 மாணவா்களுக்கு ஓராசிரியா், நடுநிலைக் கல்வியில் 17 மாணவா்களுக்கு ஓராசிரியா், மேல்நிலை கல்வியில் 21 மாணவா்களுக்கு ஓராசிரியா் என மாணவா் - ஆசிரியா் விகிதம் குறிப்பிடத் தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது.

“இது ஒவ்வொரு மாணவா் மீதும் கூடுதலாக கவனம் செலுத்துதல், ஆசிரியா்கள்-மாணவா்கள் இடையே கலந்துரையாடலை வலுப்படுத்துதல், மேம்பட்ட கற்றல் அனுபவத்துக்குப் பங்களித்தல், கல்வி கற்பித்தலில் நற்பலன்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்,” என்று ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு தெரிவித்ததாக தினமணி ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 23 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஓராசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 3,671 என்றும் கடந்த 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் நாட்டில் ஓராசிரியா் பள்ளிகள் 6% குறைந்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளையில், நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அறவே இல்லை என்ற நிலை மாறியுள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 38% குறைந்துள்ளது என்றும் முந்திய கல்வியாண்டுகளுடன் ஒப்பிடுகையில், பள்ளி இடைநிற்றல் விகிதம் 2024-25ஆம் கல்வியாண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்