புதுடெல்லி: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களும் இணைந்து கூட்டுப் பட்டக்கல்விப் பாடத்திட்டங்கள் குறித்து ஆராய்வதாக இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 20 முதல் 26ஆம் தேதி வரை சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அவர் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 21) சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்த அவர் இரு நாடுகளுக்கிடையே பள்ளிக் கல்வி, வேலைப்பயிற்சி, ஆய்வுக்கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்தாலோசித்ததாகக் கூறப்பட்டது.
‘திறமை, வளங்கள், சந்தை’ ஆகிய முக்கிய அம்சங்களின்வழிப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று இந்தியக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூறினர்.
பிரதமர் வோங்குடனான சந்திப்பில், சிங்கப்பூரை இந்தியா நம்பகமான அறிவுசார் பங்காளித்துவ நாடாகக் கருதுவதை அமைச்சர் பிரதான் வலியுறுத்தினார். தொழில்நுட்பம், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள், புத்தாக்கச் சூழல் போன்ற அம்சங்களில் பங்காளித்துவத்தை அமைச்சர் பிரதான் வலியுறுத்தினார்.
அமைச்சர் பிரதான், துணைப் பிரதமர் கான் கிம் யோங்கையும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.
வருங்காலத் தலைமுறையினரிடையே போட்டித்தன்மையை மேம்படுத்த, திறன் அடிப்படையிலான கல்வி, பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வெளிநாட்டு உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் இந்திய மாணவர்கள் சிங்கப்பூர் நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி அனுபவம் பெறுவது குறித்தும் இருவரும் கலந்துபேசினர்.
என்யுஎஸ் வளாகத்தைச் சுற்றிப்பார்த்த அமைச்சர் பிரதான் பல்கலைக்கழகத்தின் தலைவரையும் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடனான சந்திப்பில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அறிவுசார் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பிரதான் கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் ஏறக்குறைய 500 பேரை அவர் சந்தித்ததாகக் கூறப்பட்டது.