ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஏழு மாதங்களில் நடத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் முஸ்கான் 12’ அதிரடி நடவடிக்கையின் மூலம் 6,307 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில மகளிர் பாதுகாப்புப் பிரிவு காவல்துறையின் தலைமை இயக்குநர் சாரு சின்ஹா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சின் இந்தத் தேசிய அளவிலான அதிரடி நடவடிக்கை, தெலுங்கானா மாநிலத்தில் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் வழிகாட்டலில் ஜூலை மாதத்தில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட மொத்த சிறார்களில் 5,892 சிறுவர்களும் 415 சிறுமிகளும் அடங்குவர். இதில் 3,447 சிறுவர்கள் தெலங்கானா மாநிலத்தையும் 2,860 சிறுவர்கள் பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 15 மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், நேப்பாளத்தைச் சேர்ந்த 40 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் சிறுவர் ஒருவர் கொத்தடிமையாக இருந்தார். 647 சிறதுவர்கள் தெருக்களிலிருந்து மீட்கப்பட்டனர். 43 சிறுவர்கள் பிச்சை எடுத்ததாகக் கண்டறியப்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையினர் 1,705 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்து, 1,710 சந்தேகப் பேர்வழிகளைக் கைதுசெய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் 5,737 பேர் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 570 சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்பணியில் மகளிர் வளர்ச்சி மற்றும் சிறார் நலத்துறை, தொழிலாளர் துறை, சுகாதாரத் துறை, சிறார் நலக் குழுக்கள், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொண்டூழிய அமைப்புகளுடன் இணைந்து 620 காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் படைகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், செங்கல் சூளைகள், வாகனப் பட்டறைகள், கட்டுமான இடங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டன.
உணவகங்கள், மளிகைக் கடைகள், வாகனத் துறை, இறைச்சிக் கடைகள், காலணி விற்கும் இடங்கள், மின்னணுவியல் கடைகள் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாகப் பணியாற்றிய சிறுவர்களும் பள்ளியிலிருந்து விலகிய சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

