புதுச்சேரி: புதுச்சேரிக்கு முதல்முறையாக சுற்றுலா சொகுசுக் கப்பல் சென்றதை எதிர்த்து, ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக மறியல் போராட்டம் நடத்தியுள்ளது.
புதுச்சேரியில் முதன்முறையாக கடல்வழிப் பாதை திறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ‘கோர்டெலியா குரூஸ்’ நிறுவனம் இயக்கும் 210.8 மீட்டர் நீளம்கொண்ட சொகுசுக் கப்பல் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை புதுச்சேரி சென்றடைந்தது.
கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் நங்கூரமிட்ட அந்தக் கப்பலில் 1,231 பயணிகளும் 574 பணியாளர்களும் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் படகுகள் மூலம் கப்பல் பயணிகள் புதுச்சேரி கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணக் கப்பலின் வருகையால் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் படகுகளுக்கான கடற்கரைக் கட்டணம், கிடங்குக் கட்டணம் போன்றவை மூலம் நேரடி வருவாய் கிடைக்க உதவும் என்கிறது அரசுத் தரப்பு.
ஆனால், இக்கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் தலைமையில் போராட்டமும் அதைத்தொடர்ந்து மறியலும் நடந்தன.
முன்னதாக, புதுச்சேரியில் கடந்த திமுக - காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தச் சுற்றுலா சொகுசுக் கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போதே அதைக் கடுமையாக எதிர்த்தன.
தொடர்புடைய செய்திகள்
சொகுசுக் கப்பலில் சூதாட்டம் நடைபெறும் என்பதால் மாநிலக் கலாசாரம் சீரழியும் என்று அவை கூறின. அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், 2022ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல்வழிப் பாதையில் சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் சொகுசுக் கப்பல் சேவையைத் தொடங்கி வைத்தார்.
சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல், புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி இறக்கவும் திட்டமிடப்பட்டது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும் இக்கப்பல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் சொகுசுக் கப்பல் பயணம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதால், புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் சென்றது.
பயணிகளை வரவேற்ற சுற்றுலாத்துறைச் செயலர் மணிகண்டன், புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்து அதன் கலாசாரத்தை அவர்கள் அறிந்துகொள்ள சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.
கலாசாரத்துக்கோ மீனவர்களுக்கோ எதிரான அம்சங்களை அரசாங்கம் அனுமதிக்காது என்றார் திரு மணிகண்டன.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சேவை இடம்பெறுவதாகக் கூறிய அவர், இதனால் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினையோ கலாசார சீரழிவோ ஏற்படவில்லை என்றார்.
மீனவர்களுடன் இணைந்து சுற்றுலாத்துறை செயல்படுவதாகவும் கப்பல் வரும்போது மீனவர்கள் படகுகளில் அவ்வழியே செல்லாமலிருப்பது உறுதிசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இக்கப்பல் சேவை வழங்கும் என்று கூறப்படுகிறது.

