வேலைவாய்ப்பு உறுதியை நிறைவேற்றாததால் கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தர உத்தரவு

வேலைவாய்ப்பு உறுதியை நிறைவேற்றாததால் கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தர உத்தரவு

மாதிரிப்படம்: பிக்சாபே

23 Sep 2026 - 8:57 pm

1 mins read

புதுடெல்லி: தங்களது கல்வி நிறுவனத்தில் படித்தால் 100 விழுக்காடு வேலை கிடைக்கும் என உறுதியளித்து, பின்னர் அதனை நிறைவேற்றாத கல்வி நிறுவனம் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கவும் இழப்பீடு அளிக்கவும் மாவட்டப் பயனீட்டாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் பஞ்சாப் மாநிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் 85,000 ரூபாய் செலுத்தி எம்பிஏ படிப்பில் சேர்ந்த மாணவருக்குச் சேர்க்கையின்போது வேலைவாய்ப்பு உறுதி என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், கல்வி நிறுவனம் உறுதியளித்தபடி வேலை கிடைக்காததால் அம்மாணவர் பயனீட்டாளர் ஆணையத்தில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த ஆணையம், அம்மாணவருக்குக் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும்படி அக்கல்வி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், இழப்பீடாக 10,000 ரூபாயும் வழக்குச் செலவுத் தொகையாக 5,000 ரூபாயும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி கட்டணம் செலுத்தியதாகவும் வேலை கிடைக்காததால் கடன் தொல்லைக்கு ஆளானதாகவும் அம்மாணவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், “பெரிய நிறுவனங்களில் மாணவருக்குப் பணி வாய்ப்புகள் கிடைத்தபோதும், டெல்லியில் அல்லது குருகிராமில்தான் பணியாற்றுவேன் என்று அவர் கூறியதால்தான் வேலை கிடைக்கவில்லை,” என்று கல்வி நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

பணம் செலுத்தி, படிப்பில் சேர்ந்த மாணவருக்கு அளித்த உறுதிமொழியைக் கல்வி நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் ஆணையம் தீர்ப்பளித்தது.

குறிப்புச் சொற்கள்
வேலைவாய்ப்புகல்விகட்டணம்நீதிமன்றம்