நாகாலாந்து மக்கள் சிலரின் எச்சங்களைத் திருப்பித்தந்த ஆக்ஸ்ஃபர்ட் அரும்பொருளகம்

நாகாலாந்து மக்கள் சிலரின் எச்சங்களைத் திருப்பித்தந்த ஆக்ஸ்ஃபர்ட் அரும்பொருளகம்

படம்: ஏஎஃப்பி

10 Nov 2026 - 1:21 pm

2 mins read

ஆக்ஸ்போர்ட்: இந்தியாவிலிருந்து பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின்போது எடுத்துச் செல்லப்பட்ட 39 பேரின் மனித எச்சங்களை ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக அரும்பொருளகம் ஒன்று நாகா சமூக உறுப்பினர்களிடம் திங்கட்கிழமை (நவம்பர் 9) திருப்பி ஒப்படைத்தது.

மியன்மார் எல்லையை ஒட்டியுள்ள மலைப்பாங்கான வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தைச் சேர்ந்த அச்சமூகத்தின் ஏறக்குறைய 30 பேர் இந்த நிகழ்விற்காக பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

அரும்பொருளகத்தின் இயக்குநர் லாரா வான் புரோக்ஹோவன், இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டார்.

மேற்கத்திய அரும்பொருளகங்கள் பிற கலாசாரங்களிலிருந்து தங்களுக்குக் கிடைத்த காட்சிப் பொருள்களை, குறிப்பாக மனித எச்சங்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பதை ஆய்வு செய்து சில வேளைகளில் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘பிட் ரிவர்ஸ்’ அரும்பொருளகத்தில் இந்த ஒப்படைப்பு நிகழ்ந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இனவரைவியல் அரும்பொருளகமான ‘பிட் ரிவர்ஸ்’, ஏற்கெனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பூர்வகுடிச் சமூகங்களுக்கு மனித எச்சங்களைத் திருப்பி அளித்துள்ளது.

இந்த ஆக்ஸ்ஃபர்ட் அரும்பொருளகத்தில் நாகா கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் 6,000க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது, உலகிலேயே மிகப்பெரிய சேகரிப்பு நிலையம். தற்போது, அது, நாகா மக்களுக்கு அவர்களின் மூதாதையரின் மனித எச்சங்களை, முக்கியமாக மண்டை ஓடுகளை திருப்பி அளித்து வருகிறது.

பெரும்பாலான அரும்பொருளகங்களைவிட மிகவும் தாமதமாக, 2020ஆம் ஆண்டில்தான் இந்த அரும்பொருளகம் அனைத்து மனித எச்சங்களையும் காட்சிப்படுத்துவதிலிருந்து அகற்றியது. மேலும் அதன் சேமிப்பகத்தில் இன்னும் கிட்டத்தட்ட 2,700 மனித எச்சங்கள் இருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் லாரா வான் புரோக்ஹோவன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்