மாண்டியா: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
திரு சுப்பண்ணா அய்யப்பன், 70, என்றஈவர், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்
இந்நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் காவிரி ஆற்றில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மைசூரு நகரிலுள்ள விஸ்வேவரய்யா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார் திரு சுப்பண்ணா.
கடந்த 7ஆம் தேதி இவர் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திரு சுப்பண்ணா தன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது என்றும் எதற்காக அவர் இம்முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

