பெங்களூரு: மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல், இதயம் ஆகிய மனித உறுப்புகள் இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளன.
பெங்களூரின் கோரகுண்டேபாளையா பகுதியிலிருந்து பொம்மசந்திரா பகுதிக்குச் செல்லும் மெட்ரோ ரயிலில், உறுப்பு மாற்று சிகிச்சைக்காக அவை கொண்டு செல்லப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் கிடைப்பது எளிதல்ல என்ற பிரச்சினை ஒருபுறமிருக்க, தானம் பெறப்படும் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது.
காரணம், பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல். அவசர நேரங்களில் ‘ஆம்புலன்ஸ்’கள்கூட உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து, ‘ஜீரோ டிராபிக்’ எனப்படும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது. அதாவது, உடல் உறுப்புகளுடன் செல்லும் வாகனம் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கிச் செல்லும்போது, அங்கு போக்குவரத்து அறவே நிறுத்தப்படும். இந்த ஏற்பாடு ஓரளவு கைகொடுத்தாலும், அதன் பின்னர் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, அவசரத் தேவையாக உடல் உறுப்புகளை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொம்மசந்திராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு ஒரு நுரையீரல் தேவைப்பட்டது. இதுபோல் மற்றொரு நோயாளிக்கு இதயம் தேவைப்பட்டது.
இதையடுத்து, அவ்விரு உறுப்புகளையும் கோரகுண்டேபாளையாவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நாராயணா ஹெல்த் சிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வியாழக்கிழமை (அக்டோபர் 30) காலை கோரகுண்டேபாளையாவில் இருந்து மருத்துவர்கள், ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் நுரையீரல், இதயத்துடன் மெட்ரோ ரயிலில் காலை 9.34 மணிக்குப் புறப்பட்டனர்.
சரியாக 10.10 மணிக்கு மற்றொரு மெட்ரோ ரயிலில் ஏறி 10.34 மணிக்கு பொம்மசந்திராவை அடைந்தனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு இரு உறுப்புகளும் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டன.
இதன்மூலம் 33 கிலோமீட்டர் தூரத்தை 33 நிமிடங்களில் கடந்து அவ்விரு உறுப்புகளும் குறித்த நேரத்தில் பொம்மசந்திராவில் உள்ள மருத்துவமனையைச் சென்றடைந்தன.
இதனால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

