‘பாஸ் ஸ்கேம்’ இணைய மோசடிக் கும்பல் பின்னணியில் பாகிஸ்தான், சீன உளவாளிகள்

‘பாஸ் ஸ்கேம்’ இணைய மோசடிக் கும்பல் பின்னணியில் பாகிஸ்தான், சீன உளவாளிகள்

2 mins read
0acabbfe-8c86-40ec-806e-54f35deef19e
‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் இயங்கிவந்த அந்தக் கும்பல், இந்தியாவில் மட்டும் பெருமளவிலான பணத்தைச் சுருட்டியுள்ளது. - படம்: ஈபிஎஸ்
Google News Preferred Icon

அகமதாபாத்: அனைத்துலக அளவில் பலரை ஏமாற்றி, பேரளவிலான பணத்தை சூரையாடிய கும்பலை அகமதாபாத் இணையக் குற்றப்பிரிவு முடக்கியுள்ளது.

இந்தக் கும்பல் அரங்கேற்றிய இணைய மோசடிச் சம்பவங்களின் பின்னணியில் சீன-பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் இயங்கிவந்த அந்தக் கும்பல், இந்தியாவில் மட்டும் பெருமளவிலான பணத்தைச் சுருட்டியுள்ளது

பெருநிறுவனங்களின் தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்குகளைத் தொடங்கி, ஊழியர்களுக்கு அவசர பணப் பரிவர்த்தனை செய்யக் கோரி குறுந்தகவல் அனுப்புவது இந்த மோசடிக் கும்பலின் வழக்கமாகும். இதுகுறித்த தகவல்கள் பரவலாக வெளியானதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தக் கும்பலின் பின்னணியில் பாகிஸ்தான், சீனாவைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதும் இணைய மோசடியில் அவர்களுக்குப் பங்கிருப்பதும் உறுதியானது இந்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இந்திய எல்லைக்குள் இருந்து இணையக் குற்றங்களை அரங்கேற்றத் தேவையான உள்கட்டமைப்பு உதவிகளை வழங்கி வந்துள்ளதாகவும் அகமதாபாத் காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் தெரிவித்தார்.

போலி ஆவணங்கள் மூலம் சுமார் 4,500 சிம் அட்டைகளைக் கொள்முதல் செய்த இந்தக் கும்பல், ஒரே நேரத்தில் 4 சிம் அட்டைகளை இயக்கும் சிறப்புச் சாதனங்களைப் பயன்படுத்தியதாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இக்கும்பலுக்கு எதிராக இந்தியா முழுவதும் 26 மாநிலங்களில் 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையக் குற்றவாளிகள் பயன்படுத்திய 10,000க்கும் மேற்பட்ட சாதனங்களை அதிரடியாக முடக்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

“சீனாவால் உருவாக்கப்பட்ட ஆபத்தான செயலிகளை இந்தியர்களின் கைப்பேசிகளில் ஊடுருவச் செய்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் செயல்படும் போலி தொலைபேசி சேவை மையம் மூலம் நிதி மோசடிகளை அரங்கேற்றியுள்ளனர்,” என்று காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்