டெல்லித் தாக்குதல் சதிகாரர்கள் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி சூளுரை

1 mins read
fcd81730-0e65-4c34-961e-7095353517c7
பூட்டான் தலைநகர் திம்புவில் இந்தியப் பிரதமர் மோடி உரையாற்றினார். - படம்: இந்து தமிழ் திசை

திம்பு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லித் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று சூளுரைத்திருக்கிறார். சதிகாரர்கள் எவரும் தப்பிக்க முடியாது என்றார் அவர்.

திங்கட்கிழமை (நவம்பர் 10) இரவு, டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்ததில் பலர் மாண்டனர். மேலும் சிலர் காயமுற்றனர்.

பூட்டானுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுத் தலைநகர் திம்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது டெல்லித் தாக்குதல் குறித்துப் பேசினார். தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் சொன்னார். சதித்திட்டத்தின் பின்னணி குறித்த முழு விவரத்தையும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துவிடுவர் என்று திரு மோடி கூறினார்.

இந்தியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு, தாக்குதல் சம்பவத்தைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் கையில் எடுத்துள்ளது. அதற்கான காரணத்தைக் காவல்துறை வெளியிடவில்லை.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அதிகாரிகளுடன் உயர்நிலைப் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டமொன்றைச் செவ்வாய்க்கிழமை நடத்தினார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கை, மாலத்தீவுகள், நேப்பாளம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், வெடிப்புச் சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் செங்கோட்டை மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்