டேராடூன்: இரவு பகலாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையால் உத்தராகண்ட் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (ஜூலை 27) இரவு முதல் நிற்காமல் மழை பெய்வதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
மழை இன்னும் தீவிரமடையக்கூடும் என்று வெளியான வானிலை முன்னறிவிப்பால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஐந்து மாவட்டங்களின் கல்விக்கூடங்களுக்கு புதன்கிழமை (ஜூலை 29) வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆங்காங்கே ஏற்பட்ட சிறிய நிலச்சரிவுகள் காரணமாக யாத்திரை செல்லும் வழிப் பாதைகள் தடைபட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சார் தாம் யாத்திரை இரு நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதை சீரமைக்கப்பட்டு, வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் சார் தாம் யாத்திரை மீண்டும் தொடரும் என்று கார்வால் பகுதி ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் கூறினார்.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் உத்தரகாசி மாவட்டத்திலுள்ள சார் தாம் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான யமுனோத்ரி செல்லும் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டதாக ஊடகங்கள் கூறின. அதனைச் செப்பனிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
சேதமுற்ற பகுதி ராமர் கோவிலுக்கு அருகே உள்ளது என்பதால் பக்தர்கள் அந்தப் பகுதியைக் கடப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

