தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-சீனா நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்படலாம்

2 mins read
fc2857e8-3b21-4235-b072-38d2b843625a
இருதரப்புக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்தியா-சீனா இடையேயான, நேரடி பயணிகள் விமானச் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விரைவாக, அடுத்த மாதமே விமானச் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குறுகிய கால அறிவிப்பில், சீனாவுக்கான நேரடி விமானச் சேவையைத் தொடங்க தயாராக இருக்குமாறு ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி பயணிகள் விமானச்சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், இரு நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத் துருப்புகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

இதனால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேரடி விமானச்சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. எனவே, சீனா-இந்தியாவுக்குச் செல்லும் பயணிகள் ஹாங்காங், பேங்காக், சிங்கப்பூர் வழியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பயண நேரமும் கட்டணமும் அதிகரித்தன.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி இம்மாதம் அங்கு செல்லவிருக்கிறார். அப்போது, அவர் சீன அதிபரைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

அண்மையில்தான் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டுடன் தொடர்புள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்று வந்தனர்.

குறிப்புச் சொற்கள்