‘பிரதமராகும் விருப்பத்தைச் சொன்ன பிரனாப் முகர்ஜி’: சோனியா காந்தி

‘பிரதமராகும் விருப்பத்தைச் சொன்ன பிரனாப் முகர்ஜி’: சோனியா காந்தி

படம்: ஏஎஃப்பி

10 Nov 2026 - 7:57 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் அதிபரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு பிரனாப் முகர்ஜி, பிரதமராவதற்கான தமது விருப்பம் குறித்து ஒருமுறை தம்மிடம் வெளிப்படுத்தியதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அப்போதைய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ல் அது நிகழ்ந்ததாகக் கூறிய அவர் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததைச் சுட்டினார்.

திரு பிரனாப் முகர்ஜிக்கும் தமக்கும் இடையிலான உரையாடல் குறித்து ‘பிலோங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற நூலில் திருவாட்டி சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்த நூலை ஹார்பர்கோலின்ஸ் இந்தியா என்ற பதிப்பகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) வெளியிட்டது.

அப்போதிருந்த நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எரிச்சலடைந்த திரு முகர்ஜி, 2010ல் மீண்டும் ஒரு முறை மேல் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்ற யோசனையைத் தம்மிடம் பகிர்ந்துகொண்டது அதிர்ச்சி அளித்ததாக சோனியா காந்தி நூலில்குறிப்பிட்டார்.

“அப்போது நான் பேச்சை மாற்றினேன். அவர் ஏமாற்றமடைந்திருக்கக்கூடும் என்றாலும் அதை என்மீது ஒரு குறையாக வைத்திருப்பதாக அவர் ஒருபோதும் காட்டிக்கொள்ளவில்லை. இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு 2012ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக அவர் முன்மொழியப்பட்டு, தேர்ந்தெடுக்கவும்பட்டார். எப்போதும் அறிவார்ந்த, ஞானம் கொண்ட ஒரு அரசியல்வாதியாகவே விளங்கிய அவருடன் உரையாடுவதற்காகவே பெரும்பாலும் நான் அவரை நேரில் சென்று சந்திப்பது வழக்கம்,” என்று திருவாட்டி சோனியா காந்தி மேலும் கூறினார்.

2012 முதல் 2017 வரை இந்தியாவின் அதிபராகச் சேவையாற்றிய திரு பிரனாப் முகர்ஜி, 2020ஆம் ஆண்டு காலமானார்.

அவர் அதிபராக இருந்த காலத்தில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது.

அதிபர் முகர்ஜி, பிரதமர் மோடியுடன் ஒரு நல்லிணக்கமான நட்புறவைப் பேணி வந்தார். திரு முகர்ஜி ஒரு தந்தை போன்றவர் என்றும் வழிகாட்டி என்றும் திரு மோடி வருணித்துள்ளார்.

இந்திய அரசியல், சொந்த வாழ்க்கை குறித்த பல விஷயங்களையும் சோனியா காந்தி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்