சண்டிகர்: கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் பஞ்சாப், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2025ன்கீழ் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு பஞ்சாப் தலைமைச் செயலாளரும் மாநில செயற்குழுத் தலைவருமான கே.ஏ.பி. சின்ஹா அதிகாரம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேவையான, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்குக் கடுமையான வெள்ளத்தால் பஞ்சாப் பாதிக்கப்பட்டுள்ளது என்று திரு சின்ஹா கூறியுள்ளார்.
இந்த இயற்கைப் பேரிடரால் 30 பேர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் 1,200க்கும் மேற்பட்ட கிராமங்களும் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 19,500 பேர் தங்களது இருப்பிடங்களைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர்.
பருவமழை கொட்டித் தீர்க்கும் நிலையில், அணைகளும் திறக்கப்பட்டதால் பல மாவட்டங்களிலும் வெள்ள நிலைமை மோசமாகியது.
“வரும் நாள்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று திரு சின்ஹா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 3.75 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள், அதிலும் குறிப்பாக நெல்வயல்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன், ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் வாழ்வாதாரத்திற்கு அவற்றை நம்பியிருந்த ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிலையங்களையும் செப்டம்பர் 7ஆம் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) ஃபெரோஸ்பூர் மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
இதனிடையே, மேற்கு இமயமலைப் பகுதிகளிலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் வியாழக்கிழமையிலிருந்து மழை சற்று தணியக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிதமான அல்லது பெருமழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

