புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 27 இடங்களை உள்ளடக்கி இந்தியா அதிகாரபூர்வ வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய நில அளவைத் துறை இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அருணாச்சலப் பிரதேசம். ஒருங்கிணைந்த இந்திய மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
மேலும் அருணாச்சலப் பிரதேசத்தை ஜாங்னான் என்று குறிப்பிட்டு வருகிறது.
தவிர, அருணாச்சலப் பிரதேசத்தின் பல முக்கியமான இடங்களை தனது நாட்டின் அதிகாரபூர்வ வரைபடத்தில் இணைத்து இந்தியாவை சீண்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்குச் சீன மொழியில் பெயர் சூட்டி வரும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 27 முக்கிய இடங்களை இந்தியா தனது வரைபடத்தில் முறைப்படி இணைத்துள்ளது.
மேலும், அந்த இடங்களின் புவியியல் அம்சங்கள், அதிகாரபூர்வ இந்தியப் பெயர்கள் ஆகியவையும் இந்தியாவின் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாக சீனாவின் இத்தகைய அத்துமீறல்களுக்கு தூதரக ரீதியில் மட்டுமே இந்தியா கண்டனம் தெரிவிக்கும்.
இம்முறை இந்திய இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வரைபடம் வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வரைபடத்தில் போர் நினைவிடங்கள், கணவாய்கள், ஏரிகள் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு முதன்முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆறு இடங்களின் பட்டியலைச் சீனா வெளியிட்டது.
அதன் பின்னர் இதுவரை மேலும் 26 பெயர்களுடன் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் அபத்தமானவை என்று இந்தியா விமர்சித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று வலியுறுத்தி வரும் இந்திய அரசு, தற்போது அம்மாநில அரசுடன் கலந்தாலோசித்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அம்மாநிலத்துக்கு உட்பட்ட இடங்கள் துல்லியமாக அடையாளம் காணப்படுவதை உறுதி செய்யவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வரைபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


