தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்

2 mins read
827a0d23-0794-4846-a484-1728f3f34464
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுவிட்டதாக உத்தராகண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். - படம்: இபிஏ

உத்தரகாசி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்திலுள்ள தராலி என்ற சிற்றூர் அண்மையில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பேரழிவைச் சந்தித்தது. அதில் பெரும்பாலான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனையடுத்து, வீடுகளை முற்றிலுமாக இழந்தோர்க்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அறிவித்தார்.

இந்நிலையில், தராலி, ஹர்ஷில் கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை ஏற்க மறுத்த அக்குடும்பங்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை முதல்வர் தாமி தலைமையிலான அரசாங்கம் குறைத்து மதிப்பிட முயல்வதாகக் கூறி, போராட்டத்தில் இறங்கின.

ஆனால், இது இடைக்காலத் தொகைதான் என்றும் இழப்பை முழுமையாக மதிப்பிட்டு, விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உத்தரகாசி மாவட்டக் குற்றவியல் நீதிபதி பிரசாந்த் ஆர்யா குறிப்பிட்டார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. பேரிடரில் ஐவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டன என்றும் இன்னும் 49 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுவிட்டதாக முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வழங்க முடிவுசெய்துள்ளோம். வருவாய்த்துறைச் செயலர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தையும் அக்குழு ஆராயும்,” என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்