ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு: அசாம் ஆடவர் கைது

ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு: அசாம் ஆடவர் கைது

படம்: என்டிடிவி

16 Nov 2026 - 3:24 pm

1 mins read

கௌஹாத்தி: அசாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக, சில்சார் பகுதியில் உள்ள நூருல் ஹக் என்பவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 14) இரவு சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நூருல் ஹக்கை கடந்த சில காலமாகத் தீவிரமாகத் தேடி வந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின்போது முதலில் அவரைக் காவலில் எடுத்த அதிகாரிகள், பின்னர் முறைப்படி கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) சில்சார் நீதிமன்றத்தில் நூருல் ஹக் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர், மேல் விசாரணைக்காக அவரை என்ஐஏ அதிகாரிகள் மிசோரம் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முந்தைய போதைப்பொருள் கடத்தல் விசாரணை ஒன்றோடு தற்போதைய கைது நடவடிக்கைக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்தக் கடத்தலில் நூருல் ஹக்கின் நேரடிப் பங்கு என்ன என்பது குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்த முழுமையான விவரங்களையும் புலனாய்வு அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து என்ஐஏ தரப்பிலிருந்து விரிவான அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், விசாரணை குறித்த அடுத்தகட்டத் தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்