புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
அனைத்துலகச் சந்தையில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை காரணமாக ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 20) வர்த்தக நேரத்தின்போது முதல்முறையாக 93.73 என்ற முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையைத் தொட்டுள்ளது.
மார்ச் 18ஆம் தேதி, எட்டியிருந்த 92.63 என்ற முந்தைய சாதனையை முறியடித்து, தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி காலை அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போதே, ரூபாய் மதிப்பு பலவீனத்துடன் 92.92 என்ற அளவில் தொடங்கியது.
தொடர்ந்து சரிவைக் கண்ட இந்திய ரூபாய், ஒரு கட்டத்தில் டாலருக்கு நிகராக 93.735 என்ற நிலையைத் தொட்டது.
ஒரே நாளில் ஒரு விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்புக் குறைவுடன், இந்திய ரூபாய் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தொடர் இடையூறுகள், நாட்டின் இறக்குமதிச் செலவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்திய நாணயத்தின் மதிப்பு இன்னும் குறையக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்கள்
அமெரிக்கா ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களும் அதற்குப் பதிலடி தரும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.
அவை உலகச் சந்தையை நிலைகுலையச் செய்துள்ளன. குறிப்பாக எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்திய கச்சா எண்ணெய் கூடையின் (Indian Crude Basket) விலை ஒரு பேரலுக்கு 156 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதிச் செலவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 8 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 65,000 கோடிக்கும் மேல்) முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதும் அமெரிக்க டாலரை நோக்கிப் படை எடுக்கின்றனர். இதனால் டாலர் குறியீடு 100ஐ நெருங்கியுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள புதிய 50 விழுக்காடு இறக்குமதி வரிகள் இந்தியாவின் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதித்துள்ளதும் ரூபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, சந்தையில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

