மும்பை: கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஆளான புகழ்பெற்ற இந்தி நடிகர் சைஃப் அலிகான், ஆறு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
பாந்த்ரா பகுதியில் உள்ள கானின் வீட்டில் திருட முயன்ற தாக்குதல்காரர், நடிகரைக் கத்தியால் குத்தினார்.
சிகிச்சைக்குப் பிறகு லீலாவதி மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) அதே வீட்டிற்குத் திரும்பினார் கான்.
அந்த வீட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வாரம் படுக்கையில் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் தொற்று ஏற்படாமலிருக்க வருகையாளர்கள் யாரையும் சந்திக்கவேண்டாம் என்றும் மருத்துவர்கள் கானுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
கத்திக்குத்துக் காயங்களுக்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
திரு கான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதை முன்னிட்டு அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்ததாகக் கூறப்பட்டது.
ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை வேளையில் சைஃப் அலிகானைத் தாக்கியதாகக் கூறப்படுபவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. அந்த ஆடவர் கத்தியால் குத்தியதில் கானின் உடலில் ஆறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.