சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: ஒன்பது காவலர்களுக்கு மரண தண்டனை

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: ஒன்பது காவலர்களுக்கு மரண தண்டனை

படம்: இந்து தமிழ்

06 Apr 2026 - 9:59 pm

3 mins read

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் தந்தையையும் மகனையும் யார் அதிகமாக அடித்தார்கள் என்பதில் வேறுபடுத்தி காட்ட இயலாது என்று நீதிபதி தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு வணிகர்களும் கொவிட்-19 காலகட்டத்தின்போது விதிமுறைகளைமீறியதாகக் கூறி காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அதையடுத்து காவல் நிலையத்தில், அப்போதைய காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது அதிகாரிகள் ஜெயராஜையும் பென்னிக்சையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பின்னர் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது அதிகாரிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கின் முழு விசாரணையும் முடிந்தபின் கடந்த மாதம் 23ஆம் தேதி கைதான 9 அதிகாரிகளும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவர்களுக்கான தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தண்டனை குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையும் மாநில அரசும் தங்கள் நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அந்த வழக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின.

இதனால் அந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்பது பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி கேட்டறிந்தார்.

அப்போது குற்றவாளிகள் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கில் தாக்கவில்லை என்றும் எதிர்பாராத விதமாக ஜெயராசும் பென்னிக்சும் உயிரிழந்தனர் என்றும் கூறினர்.

எங்கள் குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, நீதிமன்றத்தில் முன்னிலையாகி கண்ணீர் மல்க முறையீடு செய்தார்.

எந்தத் தவறும் செய்யாத தமது கணவரையும் மகனையும் காவல்நிலையத்தில் வைத்து அதிகாரிகள் ஒன்பது பேரும் கொலை செய்துவிட்டனர் என்றும் கணவர், மகன்மீது சிறு வழக்குகூட இதற்குமுன் பதிவானதில்லை என்றும் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்ற செல்வராணி, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிட்டார்.

குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள் என்ற நீதிபதி, தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கிய அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால்தான் மற்ற அதிகாரிகளுக்கும் பயம் வரும் என்றார்.

எனவே வழக்குத் தொடர்பில் கைதான ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்