இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), இணைய ஊடுருவல் தாக்குதலுக்கு ஆளானதில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் கசிந்துள்ளன.
வங்கியில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், வாடிக்கையாளர் பெயர், கைப்பேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, வாடிக்கையாளர் அடையாள எண், கடன் தொடர்பான விவரங்கள் கசிந்திருப்பது தெரியவந்துள்ளதாக எஸ்பிஐ புதன்கிழமை (அக்டோபர் 21) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தத் தன்னிச்சையான இணையப் பாதுகாப்பு நிறுவனத்தை வங்கி நியமித்துள்ளது.
எனினும், தரவுக் கசிவு வங்கியின் முதன்மைச் செயல்பாடுகள், நிதிச் செயல்பாடு, வழக்கமான வணிகம் ஆகியவற்றில் எவ்விதமான பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அது குறிப்பிட்டது.
அண்மைக் காலத்தில் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், வங்கிகள் தங்களின் இணையப் பாதுகாப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த இந்திய மத்திய வங்கி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
