புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் கடும் வெப்ப அலையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
தலைநகர் டெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் வரையும், அகமதாபாத், நாக்பூர் போன்ற நகரங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தின் பாண்டா பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெப்பநிலை 47.6 டிகிரி செல்சியஸ் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, ஹைதராபாத்தில் 35 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
மும்பை, கோல்கத்தாவில் பகல் நேர வெயிலுடன் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கடும் புழுக்கம் நிலவுகிறது.
இரவு நேரத்திலும் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வழக்கமான கோடைக்கால வெயிலுடன், உலகளாவிய ‘எல் நினோ’ தாக்கமும் ‘அர்பன் ஹீட் ஐலாண்ட்’ விளைவும் இந்த அதீத வெப்பத்திற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
நகரங்களில் உள்ள மரங்களும் பசுமைப் பரப்புகளும் அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வெப்பத்தை உறிஞ்சும் இரும்பு, கண்ணாடி, சிமெண்ட் கான்கிரீட் கட்டடங்கள் உருவானதால் இந்த விளைவு ஏற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனாலேயே, பெருநகரப் பகுதிகள் தங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட 10 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பத்துடன் காணப்படுகின்றன.
அடுத்த சில நாள்களுக்கு வடமேற்கு, மத்திய இந்திய மாநிலங்களில் இந்த வெப்ப அலை நீடிக்கும் என்றும் சில இடங்களில் 45 டிகிரியைத் தாண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவு தண்ணீர், இளநீர், மோர் பருகவும் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் மயக்கம், தலைச்சுற்றல் போன்ற வெப்பத்தாக்க அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

