கேதார்நாத்தில் கடும் நிலச்சரிவு; 10,000 யாத்ரிகர்கள் மீட்பு

கேதார்நாத்தில் கடும் நிலச்சரிவு; 10,000 யாத்ரிகர்கள் மீட்பு

1 mins read
34f75826-c88d-450d-ac49-b24fa4671ba1
முதலில் சிறார்களும் முதியவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும் அதன்பின்னர் மற்றவர்களும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: தி எக்கானமிக் டைம்ஸ்

ருத்ரபிரயாக்: கேதார்நாத் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கிய ஆயிரக்கணக்கானோரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது கேதார்நாத். இங்குள்ள நான்கு கோவில்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்குப் பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் ‘சார் தாம்’ யாத்திரை தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பலத்த மழை பெய்தது. இதனால் கேதார்நாத் கோவில் செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

யாத்ரிகர்களால் தங்களுடைய புனித யாத்திரையைத் தொடர முடியவில்லை. மேலும் ஏற்கெனவே, கேதார்நாத் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களும் பயண வழியில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேசிய-மாநிலப் பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு 10,000 பேரை பாதுகாப்பாக மீட்டனர். முதலில் சிறார்களும் முதியவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும் அதன்பின்னர் மற்றவர்களும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து கேதார்நாத் பயணம் மீண்டும் துவங்கியது. யாத்ரிகர்களைப் பத்திரமாக மீட்ட படையினரைப் பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்