மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (ஏப் 7) கடும் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச் சந்தைகளின் விலை காரணமாக முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தை 2,500 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 831 புள்ளிகளும் சரிவு கண்டன.
வரலாறு காணாத இந்த வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பே முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது.
பல நாடுகள் அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் உலக அளவில் வர்த்தகப் போர் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தன.
பங்குச் சந்தை சரிவில் இருந்து அமெரிக்காவும் தப்பவில்லை.
வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதன் தாக்கம்தான் திங்கள்கிழமை காலை ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததாக துறைசார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாரத்தின் முதல் வர்த்தக தினத்தன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியது முதலீட்டாளர்களுக்குக் கவலை அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
திங்கள்கிழமை மாலை நிலவரம் குறித்து தகவல் இல்லை என்றாலும், இதேபோன்ற சரிவு நிலை நீடித்தால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே முதலீட்டாளர்களின் கவலையாக உள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகளுக்கு கறுப்பு நாள் என்று கூறும் அளவுக்கு ஜப்பான், சீனா, கொரியா என ஆசிய பங்குச் சந்தைகள் பலவும் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.