தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொழுந்துவிட்டு எரியும் சிங்கப்பூர் கப்பல்; கடலில் விழுந்த கொள்கலன்களால் சிக்கல்

3 mins read
a17306ba-02be-45b8-9298-0d755cd7cdb4
சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் எளிதில் தீப்பற்றக்கூடிய, நச்சுத்தன்மை கொண்ட பொருள்கள் கொண்டு செல்லப்பட்டதால் அக்கப்பலில் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிகிறது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

புதுடெல்லி: கேரளக் கடற்பகுதி அருகே திங்கட்கிழமை (ஜூன் 9) தீப்பற்றிய சிங்கப்பூர் சரக்குக் கப்பலில் ஏற்பட்டுள்ள பெருந்தீயை அணைக்கத் தொடர்ந்து போராடி வருவதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எம்வி வான் ஹாய் 503 (MV Wan Hai 503) என்ற அந்த 268 மீட்டர் சரக்குக் கப்பல், கொழும்பில் இருந்து மும்பை நோக்கிச் சென்றபோது, கேரளக் கடற்பகுதி அருகே திடீரெனத் தீப்பிடித்தது.

கப்பலில் இருந்து 18 பணியாளர்களை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இந்தியக் கடற்படையின், ஐஎன்எஸ் சூரத் கப்பல் உடனடியாக மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டது. கப்பலில் மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர். மீட்கப்பட்டவர்கள் திங்கட்கிழமை இரவு 10.45 மணிக்கு நியூ மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்ததாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

கப்பலில் இருந்த 18 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) உறுதி செய்துள்ளது. அவர்களில் காயம் அடைந்த ஆறு பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் சிகிச்சை முடிந்து வெளியேறினர்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை நீடித்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் கப்பலின் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதிப்புக்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் எம்பிஏ மேலும் கூறியுள்ளது.

சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் எளிதில் தீப்பற்றக்கூடிய, நச்சுத்தன்மை கொண்ட பொருள்கள் கொண்டு செல்லப்பட்டதால் அக்கப்பலில் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிகிறது.

தீயை அணைக்கத் தொடர்ந்து போராடி வருவதாக இந்தியத் தற்காப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி அதுல் பிள்ளை தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கையில் ஏழு கப்பல்களும் ஐந்து டோர்னியர் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமையன்று ஐஎன்எஸ் சுஜாதா, கடலோரக் காவல்படை கப்பலான சமர்த் ஆகியவையும் அப்பணியில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை சரக்குக் கப்பலில் இருந்து 25 கொள்கலன்கள் கடலில் விழுந்துவிட்டன. கடல் நீரில் மிதக்கும் அவற்றால் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது பற்றியெரியும் கப்பலை அவ்வளவு எளிதில் அணுக இயலாது. அது சாத்தியமற்றது. எனவே, கடலோரக் காவல்படையினர் கப்பலை நெருங்கி அதன் மீது தண்ணீரைப் பாய்ச்சினர்,” என்றும் அதுல் பிள்ளை கூறினார்.

தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து அவ்வப்போது வெடிச்சத்தம் எழுந்து வருவதாகத் தெரிகிறது. 868 மீட்டர் நீளமுள்ள அந்தக் கப்பல், ஏறக்குறைய 10 முதல் 15 டிகிரி வரை சாய்ந்து இருப்பதாகவும் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிவதாகவும் இந்தியக் கடலோரக் காவல்படை செவ்வாய்க்கிழமை கூறியது.

கடலில் விழுந்த கொள்கலன்கள் எர்ணாகுளம், திருச்சூர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சில அபாயகரமான பொருள்கள் இருப்பதாகக் கருதப்படுவது சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

கண்ணூரில் உள்ள கடலோரக் காவல்துறை மீனவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கப்பலிலிருந்து காணாமல் போனவர்களில் இருவர் தைவானைச் சேர்ந்த்வர்கள் என்றும் மற்ற இருவரும் இந்தோனீசியா, மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்