தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் ஏற்றுமதிச் சந்தையில் திறன்பேசிக்கு முதலிடம்

1 mins read
b5b53f1f-aec3-4cf6-95ca-575b60e463b4
திறன்பேசி ஏற்றுமதிகளின் அதிகரிப்புக்கு அமெரிக்காவும் ஜப்பானும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. - படம்: ஏஎஃப்பி

இந்தியாவின் ஏற்றுமதிச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களையும் வைரக்கற்களையும் விஞ்சி திறன்பேசிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பதை அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

தேவை அதிகரித்துள்ளதாலும் கொள்கை ஊக்குவிப்புகளாலும் திறன்பேசி ஏற்றுமதிகள் 2024/25 நிதியாண்டில் 55 விழுக்காடு உயர்ந்து US$24.14 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. 2023/24 நிதியாண்டில் திறன்பேசி ஏற்றுமதிகளின் மதிப்பு US$15.57 பில்லியனாகவும் 2022/23 நிதியாண்டில் அது US$10.96 பில்லியனாகவும் இருந்தது.

இந்த அதிகரிப்புக்கு அமெரிக்காவும் ஜப்பானும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவுக்கான இந்தியாவின் திறன்பேசி ஏற்றுமதிகள் மட்டும் கடந்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளன.

ஜப்பானுக்கான ஏற்றுமதிகள் இதே காலகட்டத்தில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் திறன்பேசித் துறை குறிப்பிடத்தக்க அளவில் உருமாறியுள்ளதாக வர்த்தக அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை பிடிஐ செய்தித் தளம் மேற்கோள்காட்டியது. திறன்பேசித் தயாரிப்புக்கும் ஏற்றுமதிக்கும் இந்தியாவை ஒரு முக்கிய நடுவமாக இது மாற்றியுள்ளது.

அமெரிக்காவும் ஜப்பானும் ஒருபுறமிருக்க நெதர்லாந்து, இத்தாலி, செக் குடியரசு ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி பதிவானது.

குறிப்புச் சொற்கள்