சஃப்தர்ஜங் மருத்துவமனைமீது நம்பிக்கை இல்லை; நீதிமன்றத்தை நாடிய சோனம் வாங்சுக்கின் மனைவி

சஃப்தர்ஜங் மருத்துவமனைமீது நம்பிக்கை இல்லை; நீதிமன்றத்தை நாடிய சோனம் வாங்சுக்கின் மனைவி

2 mins read
925cf730-9fb0-401a-b514-15ab5d54e489
சோனம் வாங்சுக், அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ. - படம்: மாலை மலர்

புதுடெல்லி: சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் சேர்க்கப்பட்ட சஃப்தர்ஜங் மருத்துவமனைமீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், அது தொடர்பான மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாள்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் சனிக்கிழமை (ஜூலை 18) டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகத்தின்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி டாக்டர் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

“சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரிகள், சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டது என்றும் இது உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் எங்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் வெளியிட்ட பொதுச் சுகாதார அறிக்கையில் இந்த எண்ணைக் குறிப்பிடாமல், ‘பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

“மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் தளத்தில் 30 காவலர்களும் வளாகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அவரைப் பார்க்க எங்களை அனுமதிப்பதில்லை. இது மருத்துவச் சிகிச்சை அல்ல, ‘சட்டவிரோதக் காவல்’ ஆகும்.

“எனது கணவருக்கு எனது சம்மதம் இன்றியோ அல்லது அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்றியோ எந்தவொரு மருந்தையும் செலுத்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளேன்,” என்று மனுவில் கீதாஞ்சலி ஜே.ஆங்மோ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து விடுவிக்க அரசுத் தரப்பும் சஃப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகமும் மறுப்பு தெரிவித்துள்ளன.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணித்து தேவை ஏற்பட்டால் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு மற்றும் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கிடையே, மருத்துவமனைக் காவலில் இருந்தபடியே தனது மனைவி கீதாஞ்சலி மூலமாக சோனம் வாங்சுக் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “திங்கட்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டும் என்றும் இந்தப் பேரணி இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது குறித்த நடவடிக்கைகளை காவல்துறை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்